எச்சரிக்கை

எச்சரிக்கை

Wednesday, 30 May 2012

கவிஞனா நீ? உன்னைப் போல் இல்லை.

30 வருடங்களுக்கு முன் கண்ணதாசனைப் பார்த்து நீயும் ஒரு  கவிஞனா எனக் கேட்டார் கருணாநிதி. அதற்குக் கண்ணதாசனின் பதில் கவிதை இது.

    அஞ்சாதா சிங்கமென்றும்
    அன்றெடுத்த தங்கமென்றும்
    பிஞ்சான நெஞ்சினர் முன்
    பேதையர்முன் ஏழையர் முன்
    நெஞ்சாரப் பொய்யுரைத்து
    தன்சாதி தன்குடும்பம் தான்வாழ‌ தனியிடத்து
    பஞ்சாங்கம் பார்த்திருக்கும்
    பண்புடையான் கவிஞ‌னெனில்
    நானோ கவிஞ‌னில்லை
    என்பாட்டும் கவிதையல்ல‌.

Friday, 25 May 2012

ஆண்டியின் நையாண்டி

நடைமிகப் பயின்று நலம்பேணும் நல்வாய்பே
பெட்ரோல் விலை ஏற்றம்.

வாழ்விலே இல்லாத ஏற்றங்கள் அடிக்கடி
விலையிலே நிகழ்தல் சாபம்.

Thursday, 24 May 2012

எம் குரு ஸ்ரீ மஹாஸந்நிதானம்

குருவின் அருளே இறையைக் காட்டிடும்
குருவின் வாக்கே வளமை கூட்டிடும்
குருவின் நோக்கே சீர்மிகச் செய்வதால் 
குருவை வணங்குதல் தலை.
 
பார்புகழ் சிருங்கேரி தலத்திலே விளங்கும்
பாரதம் போற்றிடும் ஞானத்திரு வடிவம்
மறைபொருள் உணர்ந்த மனமோ ஸ்படிகம்
மந்திரம் நீர்வாழும் தலம்.

Friday, 11 May 2012

சீட்டுக்கவி

அகிலத்தில் அரும்பணிக ளாற்றவே வந்தவன்
             உன்னருள் வேண்டு கின்றேன்
 அலுக்காது அறப்பணிகள் ஆற்றவே உலகினில்
             வற்றாத பொருள் வேண்டுமே!



Sunday, 6 May 2012

கவிஞன் வாக்கு

கவிஞரில் யானோர் கனலின் பிறப்பாம்
சுணக்கம் நீக்கச் சுடராய் மிளிர்வேன்
இருளை விரட்ட ஒளியும் தருவேன்
இரும்பாய்ச் சிக்கல் எதிரே வந்தால்
இளக்கி வைப்பேன் பின்னோர் வாழ.

எம்வழி யதுவோ  இறைவன் தந்தது
எம்பணி எல்லா மவனைச் சார்ந்தது
எழுச்சி தந்தவன் துணிவும் தந்தனன்
எம்முயிர் கலந்த துணிவின் துணையால்
எமர்வாழ வழிசெய அருளும் தந்தான்.

பணம்தரும் பணிகள் பலவும் செய்வேன்
பொருளை எமர்நலம் வாழத் தருவேன்
துன்பம் சூழ்ந்த மாந்தர் சிறக்கத்
துணையாய் நிற்க இறைவனைப் பணிப்பேன்
எனதன் பிறைவனும் அதுவே செய்வான்

உலகில் எங்கோ மூலையில் இருப்பினும்
ஊக்கம் வற்றா துழைக்கும் மக்கள்
உலகம் வாழத் தம்சுகம் குறைத்து
ஊற்றாய் நன்மை பெருக்கும் மாந்தர்
உளமகிழச் செய்தல் உற்றதோர் பணியாம்

இறையை உணர்ந்தோர் எமரே யாவர்
இறைப்பணி  செய்யும் எமரே பெரியோர்
இறையை வாழ்த்தித் தம்மின்பம் குறைத்து
இம்மையும் சிறக்க வழிசெயும் சான்றோர்
இமயம் மிஞ்சும் திறமும் கொண்டோர்.

எமர்வழி எம்மொழி வாழ்க்கை விதிகள்
எள்ளல் செய்தே யார் நகைத்தாலும்
எமை நகையாடியே யார் பிழைத்தாலும்
எள்ளும் நீரும் இல்லா நிலைக்கு
எம்மிறை யாக்கும் எச்சரிக்கை இதுவே...

வஞ்சனை சூது சகுனிப் பேச்சால்
வக்கற்ற சிலரது சூழ்ச்சியின் பேரால்
வயிற்றில் எரிச்சலால் எமரை வைது
வயிற்றுப் பிழைப்பை நடத்தும் மாக்கள்
வயிற்றில் பிறப்போர் விளங்குதல் கடினம்


வாழ்க்கை என்பது குறுகிய காலம்
வாழ்ந்து அமைதியைத் தேடும் படலம்
வாழும் முறைமை குலைந்த இக்காலம்
வாழ்வாங்கு வாழ வழிசொல ஏற்றோர்
வாழ்வின் சாரம் உணர்ந்த எமரே!!

-பார்வதேயன்.