எச்சரிக்கை

எச்சரிக்கை

Tuesday 30 June 2015

கேதாரி அடி சேர்ந்தார்க்கு

அறத்தினை ஒழுகும் மக்கள்
அரனையே துதிக்கும் மக்கள்
அவன்பதம் பணிய மலைமேல்
அஞ்சாது வந்த மக்கள்

அசுவங்கள் உதவி கொண்டு
அசலத்தின் மீதே வந்து
அரனவன் மேனி காண
அவனையே துதித்த மக்கள்
அசையவும் ஏலாத போதும்
அடுத்தவர் உதவி கொண்டு
அவர்மேல் டோலி கட்டி
அதிலேறி வந்த மக்கள்
உடலது தளர்ந்த போதும்
உள்ளத்தில் உறுதி கொண்டு
ஊர்தியில் வான மார்க்கம்
ஊர்த்துவம் காண வந்தார்.
தவத்தினில் உளமே கொண்டு
தன்னலம் மறந்த துறவோர்
தாண்டவன் மூலம் காணத்
தாவியே மலைமேல் வந்தார்

 சூழ்ந்த பனிமலை நடுவே
சங்கரன் கோவில் காணீர்
சுற்றிய மலைகளின் மேலோ
சுள்ளெனக் குளிரும் பனியாம்
சூரியக் கதிரின் வெம்மைச்
சடுதியில் வெப்பம் கூட்டிச்
சூட்டிலே உருகி வந்து
சூழ்ந்தது ஆழி அங்கே
அரனைக் கண்டு செல்ல
அங்கே கூடிய மாந்தர்
அரை நொடி நேரத்திலே
அரன்பதம் ஏகி விட்டார்!
எத்தனை பேர் இருந்தார்
என்றங்கே கணக்குப் போட்டு
எம்மவர் சொன்னது மாந்தர்
எண்ணிலா ஆயிரம் என்று
அசுவமும் பசுவும் பின்னும் 
அங்கிருந்த ஒவ்வோர் உயிரும்
அனைத்தும் கணக்கிலே வந்தால்
அநேகமாய் லட்சங்கள் தேறும்
அனைத்து உயிர்களும் முக்தி
அடையும் பேறு பெற்று
அரனின் பாதத் தூளி
அடைந்தே மகிழும் என்றே
நம்பிக்கை இருக்கும் போதும்
நானிலம் நீத்த உயிர்கள்
நற்கதி பெறுவதே நோக்கில்
நஞ்சுண்டான் பாதம் பணிவேன்
புண்ணிய நதியோ கடலோ
புவனத்தில் எங்கு கண்டாலும்
புவிநீத்த உயிர்கள் உய்ய
புண்ணிய அர்க்யம் தாரீர்.

(கேதாரச் சிகரம் தொட்டு ஈசனின் பாதம் பணிந்து, அவன் திருமேனி தொட்டணைத்து உடலமும் உள்ளமும் பூரித்து நின்று, அங்கேயே இருக்க எண்ணியும் பற்றுவிடாது வெளியே வந்த பிறகு, அவ்வாலயத்தைச் சில காலம் முன் ஆழி சூழ்ந்து பல உயிர்கள் (50000 மனித உயிர்கள் என்பது நம்மவர் கணக்கு) அவன் பாதம் ஏகியது குறித்தறிந்து அவ்வுயிர்களுக்காகப் பிரார்த்தித்து எழுதியது. இணையத் தொடர்புச் சிக்கல்களால் அப்போதே பதிவேற்ற முடியவில்லை.)

No comments:

Post a Comment