எச்சரிக்கை

எச்சரிக்கை

Friday 31 December 2010

கைகோர்த்து நடை போட வேண்டும்

அகிலத்தில் அமைதி அரசாட்சி செய்திட
அண்டமெலாம் அன்பில் திளைத்து செழித்திட
அன்னை பூமியிது தலைதூக்கி நின்றிட
அன்பின் மைந்தராய் வையத்து மாந்தர்
கைகோர்த்து நடை போட வேண்டும்.

அனுபவம் இவையெலாம் கனவென்று எள்ளினும்
அணுவளவு சாத்தியமும் இல்லையெனும் போதிலும்
அஞ்சாத நெஞ்சோடு போராட வேண்டும்
அகம் தூயதாக்கி முன்னேற்றம் காணக்
கைகோர்த்து நடை போட வேண்டும்

ஆன்றவிந் தடங்கிய சான்றோர் சொல்லும்
ஆலோசனையும் கேட்டு வாழ்வது வேண்டும்
ஆற்றலெலாம் கொண்டு உலகம் தழைக்க
ஆரோக்கிய மனதுடன் மனிதம் செழிக்க
கைகோர்த்து நடை போட வேண்டும்!!!

(அடல்ஜி அவர்களின் Kadham Milaa kar chalna hoga என்ற கவிதை படித்து அதன் தாக்கத்தில் நான் எழுதிய கவிதை இது)

Friday 17 December 2010

கோடி பெறும் பாடல்

தமிழ் தேடி வலையில் மேய்ந்த போது கிடைத்த ஔவையின் அளப்பரிய பாடல் ஒன்று.

நிகழ்வு:

சோழ மன்னன் ஒருவன் தனது அவைப் புலவர்களை அழைத்து, “நாளை பொழுது விடிவதற்குள் நீங்கள் நாலு கோடி பாடல்கள் பாட வேண்டும்” என்று ஆணையிட்டான்.

ஓர் இரவுக்குள் நாலு கோடி பாடல்களை எப்படிப் பாடுவது என்று அவைக்களப் புலவர்கள் திகைத்தனர். அப்போது அவ்வழியே ஒளவையார் வந்தார்; புலவர்களின் கவலைக்கான காரணத்தைக் கேட்டு அறிந்தார். உடனே அவர் புலவர்களைப் பார்த்து, "இதற்காகவா திகைத்தீர்கள். கவலை வேண்டாம். இப்போதே நாலு கோடி பாடலைப் இயற்றுகிறேன்; மன்னனிடம் சென்று அதைப் கொடுங்கள்" என்று கூறிவிட்டு ஒரே ஒரு பாடலை மட்டும் பாடினார்.

அந்த நாலு கோடிக்கு இணையான ஒரு பாடல்:

மதியாதார் முற்றம் மதித்தொரு கால்சென்று 
மிதியாமை கோடி பெறும் 
உண்ணீர் உண்ணீரென்று உபசரியார் தம்மனையில் 
உண்ணாமை கோடி பெறும் 
கோடி கொடுப்பினும் குடிப்பிறந்தார் தம்முடனே 
கூடுதலே கோடி பெறும் 
கோடானு கோடி கொடுப்பினுந் தன்னுடைநாக் 
கோடாமை கோடி பெறும்
-ஔவையார்.

பொருள்:

நம்மை மதிக்காதவரின் வீட்டுக்குச் செல்லாமல் இருப்பது கோடி பொன்னுக்கு இணையானது என்றும் பொருள் கூறுவார்கள்

உண்ணுமாறு விரும்பிக் கேட்டுக் கொள்ளாதவரின் வீட்டில் உண்ணாமல் இருப்பது கோடி பொன்னுக்கு இணையானது ஆகும்.

கோடி பொன்னைக் கொடுத்தாவது நல்ல குடும்பத்தில் பிறந்தவர்களுடன் சேர்ந்து வாழ்வது கோடி பொன்னுக்கு இணையானது ஆகும்.

பலகோடி பொன் கிடைப்பதாக இருந்தாலும் சொன்ன சொல்லிலிருந்து தவறாமல் வாழ்வது கோடி பொன்னுக்கு இணையானது ஆகும்.(இலட்சத்து எழுபத்தாறாயிரம் கோடிக்கு எந்தச் செயல் இணையாகும் என்று தெரியவில்லை!)

புத்தகம் புத்தி தராது

புத்தகமே சாலத் தொகுத்தும் பொருள் தெரியார்
உய்த்தகம் எல்லாம் நிறைப்பினும் - மற்றவற்றைப்
போற்றும் புலவரும் வேறே பொருள்தெரிந்
தேற்றும் புலவரும் வேறு.

- நாலடியார்.

(நிறையப் புத்தகங்களை நிறைத்து வைத்தாலும், தூசு தட்டி வைத்துப் பாதுகாப்பவர் பலர், புத்தகங்களின் கருத்தறிந்து போற்றுவர் அறிந்த சிலர்)

Thursday 16 December 2010

நீர்காத்த ஐயன்

தண்ணென்ற நீர்காத்து தாகத்தைத் தணிக்கின்ற              
                தர்மத்தின் தலை மகனே!
திவாகரனின் ஒளிநாணும் பேரொளித் திருமுகமே
                முதுமையின் எழிற் கோலமே!
நீர்காத்த நீர்கொண்டு ஊர்வாழ வழிசெய்யும்
                நன்மையின் ஊற்றுக் கண்ணே!
வனத்திலே குடிபுகுந்து மனத்திலே ஆட்சிநெய்யும்   
                மாலீசன் பெற்ற தனமே!
 
பூரணியும் புஷ்கலையும் இருபுறத்தே கொண்டமைந்து
                புவிகாக்கும் மறை பொருளே!
புண்ணியரைப் பூரணமாய் முப்போதும் காப்பாற்றும்
                இதயத்து மணிக் கோவிலே!
காண்போர்  தம்கைகூப்ப  காணாதார் உளம்பிணிக்கும்
                மாசற்ற பொற் பாதமே!
வெண்பட்டு உடுத்திகன கம்பீரத் தோற்றத்துடன்
               அமர்ந்தருளும் ஐயன் நீரே!


வெள்ளியிலெ கவசமும் மாணிக்க மணிமுடியும்
               மின்னிவரும் திரு மேனியே!
திருக்கோலம் வருணிக்க யானறிந்த தமிழினிலே
               சொல்லெனக்குக் கிட்ட வில்லை!
வேரற்ற மரமபோல உம்மடியில் பணிகின்றேன்
               வேராகி எம்மைக் காப்பாய்!
பேரருளின் திருவுருவே மெய்ஞ்ஞான முழுப்பொருளே
               நீர் காத்த ஐயனாரே!


(இராஜபாளையத்தின் நீர் ஆதாரத்தை பாதுகாத்து எமர் வாழ்வு சிறக்க வழிசெய்யும் நீர் காத்த ஐயன் எமது குல தெய்வம். அவர் 'வடிவுடைநாயகர்' என்பது நேரிலும் புகைப்படத்திலும் கண்டோர் கூறும் கருத்து. அவர் வரப்பிரசாதி என்பதற்கு வாழ்வோர் சாட்சி.)

Wednesday 15 December 2010

கண்ணதாசன்

பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன்
பிறந்து பாரென இறைவன் பணித்தான்!
படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்
படித்துப் பாரென இறைவன் பணித்தான்!
அறிவெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்
அறிந்து பாரென இறைவன் பணித்தான்!
அன்பெனப் படுவது என்னெனக் கேட்டேன்
அளித்துப் பாரென இறைவன் பணித்தான்!

பாசம் என்பது யாதெனக் கேட்டேன்
பகிர்ந்து பாரென இறைவன் பணித்தான்!
மனையாள் சுகமெனில் யாதெனக் கேட்டேன்
மணந்து பாரென இறைவன் பணித்தான்!
பிள்ளை என்பது யாதெனக் கேட்டேன்
பெற்றுப் பாரென இறைவன் பணித்தான்!
முதுமை என்பது யாதெனக் கேட்டேன்
முதிர்ந்து பாரென இறைவன் பணித்தான்!

வறுமை என்பது என்னெனக் கேட்டேன்
வாடிப் பாரென இறைவன் பணித்தான்!
இறப்பின் பின்னது ஏதெனக் கேட்டேன்
இறந்து பாரென இறைவன் பணித்தான்!
‘அனுபவித்தேதான் அறிவது வாழ்க்கையெனில்
ஆண்டவனே நீ ஏன்’ எனக் கேட்டேன்!
ஆண்டவன் சற்றே அருகு நெருங்கி
‘அனுபவம் என்பதே நான்தான்’ என்றான்!

- கவிஞர் கண்ணதாசன்

பாரதியார்

எண்ணிய முடிதல் வேண்டும்
நல்லவே எண்ணல் வேண்டும்
திண்ணிய நெஞ்சம் வேண்டும்
தெளிந்த நல்லறிவு வேண்டும்.
பண்ணிய பாவமெல்லாம்
பரிதிமுன் பனியே போல
நண்ணிய நின் முன் இங்கு
நசித்திடல் வேண்டும் அன்னாய்.

-பாரதியார்

மனதி லுறுதி வேண்டும்
வாக்கினி லேயினிமை வேண்டும்
நினைவு நல்லது வேண்டும்
நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்
கனவு மெய்ப்பட வேண்டும்
கைவசமாவது விரைவில் வேண்டும்
தனமும் இன்பமும் வேண்டும்
தரணியிலே பெருமை வேண்டும்
கண் திறந்திட வேண்டும்
காரியத்தி லுறுதி வேண்டும்
பெண் விடுதலை வேண்டும்
பெரிய கடவுள் காக்க வேண்டும்
மண் பயனுற வேண்டும்
வானகமிங்கு தென்பட வேண்டும்
உண்மை நின்றிட வேண்டும்
ஓம் ஓம் ஓம் ஓம்!

-பாரதியார்

Tuesday 14 December 2010

நமச்சிவாய வாழ்க

உலகெலாம் உணர்ந்தவன்
பக்தர்களைக் காப்பவன்
நன்மைபல செய்பவன்
நல்லோர்க்குத் துணையவன்
ஈசன்தாள் பணிவோம்
வாழ்விலே உய்வோம்.

(இஃதென் முதல் கவிதை. நான் ஏழாம் வகுப்புப் படிக்கையிலே சேக்கிழார் பற்றியும், இறையனார் அடியெடுத்துக் கொடுத்து அவர் எழுதிய பெரியபுராணம் பற்றியும் என் தந்தையார் விளக்கிய போது "இப்படிக் கஷ்டமா இருந்தா யாருக்கும் புரியாதுப்பா. நான் எழுதறேன் ஈஸியா" என்று உலகெலாம் என்ற சொல் முதலாகக் கொண்டு எழுதிய கவிதை.)

நல்லோர் வாக்கு


நீதிவழுவாத் தலைவர்கள் பொய்க்காத நன்னெறியில்
மாநிலத்தையும் மக்களையும் மகிழ்வுற ஆளட்டும்
ஆநிரையும் ஆன்றோரும் நிறைவுபெற்று மகிழட்டும்
உலகெமெலாம் நலம்பெற்று வளத்தோடு வாழட்டும்!

இது கீழ்வரும் ஸம்ஸ்க்ருத ஸ்லோகத்தின் (யானறிந்த) தமிழாக்கம்.

ஸ்வஸ்திப் ப்ரஜப்ய பரிபாலயந்தாம்
க்ஞானேன மார்கேண மஹீம் மஹீசாம்
கோப்ராம்மணேப்யோ சுபமஸ்து நித்யம்
லோகா ஸமஸ்தா ஸுகினோ பவந்து

இறைவணக்கம்

அலைபோல் ஓடும் எண்ணங்கள் - அதில்
ஆயிரம் ஆயிரம் பாடல்கள்
அத்தனையும் சொல்ல விழைகின்றேன் - எனக்கு
ஆற்றலைத் தந்தருள் பரம்பொருளே!