எச்சரிக்கை

எச்சரிக்கை

Wednesday 26 January 2011

செவி கொடு பராசக்தி!

காணி நிலமும் கவின்மிகு வீடும்
காற்றுதரும் மரமும் கண்குளிர் பசுமையும்
காசும் பணமும் குன்றாச் செல்வமும்
காண்பதற் கெழிலான கட்டழகு மனையாளும்
காதலும் வேண்டுமுன் பராசக்தி உன்னிடம்

Wednesday 19 January 2011

வேண்டுதல்!

இனிமை கூட்டும் தனிமை வேண்டும்
இன்பம் ஊட்டும் துணையும் வேண்டும்
காலம் பார்க்காது பேசிட வேண்டும்
காலம் முழுதும் தொடர்ந்திட வேண்டும்

Tuesday 11 January 2011

விவேகத்தின் வெள்ளி

விவேகத்தின் வெள்ளியே வங்கத்தின் தங்கமே
வீண்வாத வன்முறையை வேரறுக்க வந்தவனே
கவனத்தைக் கைக்கொண்டு உலகத்தை வசம்கொண்டு
காலத்தைக் கடந்துநின்ற நற்புகழின் தனிச்சின்னமே

இல்லையென்றால் நீயில்லை இறந்துவிட்டால் இனியில்லை
அன்னையவள் பெருமையிது ஆணியடித்தாற் போலுரைத்தாய்
இளையோர்கள் உறுதியுடன் இதயங்கள் துய்யனவாய்
அன்னைபூமி காத்திடவே துணிவுகொள்ள ஆணையிட்டாய்

இளைஞர்க்கு எழுச்சியூட்டி இன்னல்கள் களையவந்து
இப்புவியின் சிறப்பதுவாம் சநாதனத்தைக் காத்தவனே
இந்துவுக்கு ஒருவீடு விருந்தோம்பல் செய்வதற்கு
இன்னபிற சொத்தெதுவும் தேவையில்லை வாழ்வதற்கு


என்றுரைத்த அறப்பரிசே மனம்நிறைத்த பேரொளியே
எல்லா உலகுக்கும் ஏற்றம்தரும் உன்வாக்கு
எழுந்து விழித்திருந்து எண்ணியது முடித்திருப்போம்
ஏத்துவோம் பணிந்துந்தன் ஈடில்லா வாக்குதனை!
 - பார்வதேயன்.
(சுவாமி விவேகானந்தரின் பிறந்த தினமான ஜன. 12, இந்தியாவில் ஆண்டுதோறும் தேசிய இளைஞர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வீரத்துறவியின் நினைவை போற்ற மட்டுமல்ல, அவரது எண்ணங்கள் ஈடேறவும் இளைஞர்கள் பாடுபடவேண்டும்.)