எச்சரிக்கை

எச்சரிக்கை

Friday, 11 May 2012

சீட்டுக்கவி

அகிலத்தில் அரும்பணிக ளாற்றவே வந்தவன்
             உன்னருள் வேண்டு கின்றேன்
 அலுக்காது அறப்பணிகள் ஆற்றவே உலகினில்
             வற்றாத பொருள் வேண்டுமே!




 குபேரனின் முதலாளி செல்வத்தின் பெருமாட்டி
              நின்னடியில் வசிக் கின்றாளே
குறையாத பெருஞ்செல்வம் அழியாத அறச்செல்வம்
               திருவடியில் கொண்டி ருப்பாளே!

திருவின் திருவே மலைமகள் தமையனே
                செல்வங்கள் தந்து  அருள்வாய்
திருவாம் செல்வத்தை சீரான நிறைவளத்தை
                 அடியேன்யான் வேண்டு கின்றேன்!

காலங்கள் பலவாகக் கல்லுக்குள் உறைகின்ற
                 தேரைக்கும் ஊட்டுவோனே
காதங்கள் தூரத்தே கைகூப்பி வேண்டுகிறேன்
                  நவநிதியம் அளித்துக் காப்பாய்!

கைகாலில் உரமுண்டு பையிலே பணமுண்டு
                  திருமலைக்கு வாவென் றழைப்பாய்
தைபிறக்க வழிதிறக்கும் உத்தம நாயகா
                  கைபிடித்து அழைத்துச் செல்வாய்!

அக்ஷயம் வேண்டிய  உனதன்பன் எனக்குநீ
                  நிச்சயம் தந்தருள் வாய்
காலமெலாம் உன் புகழை அன்போடு போற்றவே
                  ஆவன செய் தருள்வாய்!

உலகத்து நலமெலாம் உன்னுள்ளே சங்கமிக்கும்
                   சத்திய மான பொருளே!
காரணம் காரியம் சத்தியம் அக்ஷயம்
                   எல்லாமும் நீயென் றுணர்ந்தேன்.

அருளோடு ஐஸ்வர்யம் தந்தருள் நாதனே
                   முத்தமிழால் உனைப் புகழ்வேன்
புவிமெச்ச நான்வாழ்ந்தால் புகழெலாம் உனக்கன்றோ
                    சத்திய மிதே கொடுத்தேன்!!

- பார்வதேயன்.

No comments:

Post a Comment