எச்சரிக்கை
Friday, 15 June 2012
வருக நீர் எம்மான்!
ஆண்டு பதினேழாய் ஆராரோ வந்துபோக
ஆக்கத்தின் ஊக்கியிவர் திசைவழி வரவில்லை
ஏத்தியும் வணங்கியும் கூவியே அழைத்தும்
ஏக்கத்தை தீர்ப்ப தெப்போ?
குற்றமேதும் கண்டாரோ குருநாதர் பக்தியில்
குறுகுறுப்புத் தாளாது மன்றாடி வேண்டிநின்ற
சீடர்தம் மனமெல்லாம் குதித்தாடி மகிழுமாறு
சீலமுனி சென்னை வந்தார்
எப்போது எத்தனைநாள் எங்கிருப்பார் என்பதற்கு
எல்லோரும் மகிழுமாறே கிடைத்த பதில்கேளீரோ
சாதுக்கள் சிலகாலம் ஓரிடத்தில் உறைந்திருப்பர்
சாதுர் மாஸ்யமாம் கேளீர்
சிலகாலம் சென்னையிலே நானிருப்பேன் வாடாதீர்
சீர்மிகவும் காண்பதற்கு வழிதருவேன் மறவாதீர்
குருநாதர் சொற்களிவை கேட்டமனம் குளிர்ந்ததுவே
குதூகலம் என்னென்ன்று காணீர்.
கலைவாணி கைப்பொருளாய்க் கைமாற ஏற்றவராம்
கருணையின் வடிவான சாரதையின் தலைமகனை
அருள்பெற்ற சான்றோரும் கற்றுவரும் மாணவரும்
அருகிருந்து அளவளாவி மகிழ்வர்
ஆயுதமே தரிக்காது அறம்வளர்த்த பெருமகனார்
ஆதிசிவன் வழிவந்த அத்வைத மாமுனியாம்
காலடியில் உதித்தபிரான் காலடியை ஒட்டியேதம்
காலடிகள் வைத்திடுவார் இவர்.
நிற்க...
பகவத் பாதரவர் ஆயுதம் தரிக்கவில்லை
பகலவன் போன்றதிறம் கொண்டே சாதித்தார்
என்றவாதம் ஏற்பதற்கு மனமோ ஒப்பவில்லை
ஏனென்று சொல்வேன் கேளீர்
அப்பனுக்குப் பாடஞ்சொன்ன சுப்பிர மணியனவன்
அகிலத்தின் குருவாக ஓங்கிநிற்கும் எம்பெருமான்
கைப்பொருள் வடிவத்தில் அறிவுக் கூர்மை
கைக்கொள்ள வீழ்ந்ததே மருள்.
கூர்மைக்குப் பதங்காட்டும் மதிகொண்ட சீலரிவர்
விரிவான நோக்கிற்க்கு வித்திட்ட விவேகியாம்
அளப்பரிய திவர்கொண்ட அறிவின் ஆழமே
வேலுக்கு இலக்கணம் குரு.
ஆயுதமே உருவாக அல்லவை அழிக்கவந்த
ஆர்ய மாமுனி அருகிருப்பே அரும்பேறு
மாதம்மும் மாரிபொய்த்த வரலாறு மாறிடவே
மும்மாதம் அருள்மாரி அருளும்.
- பார்வதேயன்.
Labels:
ஆதிசங்கரர்,
எம் கவிதை,
குரு.,
சென்னை,
மஹா ஸந்நிதானம்,
ஸ்ருங்கேரி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment