பெற்றவர் சொல்லேற்று அரசினைத் துறந்தபோதும்
பொற்றாமரையாள் அன்னை புவிமகள் இடரகற்ற
பெருங்குற்ற அரக்கரழித்து தீமையை தீய்த்தொழித்து
பொதுவான நீதிநாட்டிப் பொறுப்பினைக் காத்தகோவே
சோதனைகள் அணியணியாய்ச் சோதித்து நின்றபோதும்
சொல்மாறாச் செம்மலாகச் சீர்மிக்க தருமவழியில்
சோர்வின்றி வாழ்ந்தெமக்கு வழிகாட்டி ஆகிநின்றாய்
சொல்லவே இனிக்குமுந்தன் சிறப்பான வரலாறு
மரபதன் மாட்சிநாட்டும் மனதினுக்கினிய ராமா
மேதினி மீதிலுன்போல் உயர்ந்தவன் கண்டதில்லை
மாதவம் புரிந்தமேலோர் செயலாலே அரக்கராயின்
மண்ணுலக மீதில்வாழத் தகுதிகளற்ற புல்லர்
நீதியைக் காக்கநீயும் போர்பல புரிந்துவென்று
நீர்ப்பெருங் கடல்கடந்து தீவினை வென்றதிருவே
நிர்மலமான மனத்தோன் கண்டாரத் தழுவியவனை
நின்னடியார் என்றாக்கி இறைநிலைக் கேத்தியோனே
பாரததேசம் இணைக்கும் பண்பாட்டுத் திருவுருவே
பாரினில் யாரும்போற்றும் வாழ்வியற் கல்விதந்தாய்
பாதகம் செய்பவரைப் பேணிக்காத்திடு மிந்நாட்டில்
பாவத்தை அழித்தொழித்த அண்ணலே வணங்குகின்றோம்
உன்னருள் போற்றநாமும் கட்டிவைத்த கோவிலிங்கே
உன்மத்தர் கைப்பட்டழிந்து உறுத்தலது நின்றதங்கே
உன்திருக் கோவிலங்கே உயர்ந்தொளி வீசவேண்டி
உன்னருள் பலங்கொண்டு களமிறங்கக் காத்திருப்போம்.
ஊழ்வினை எதுவரினும் உன்னருளால் வென்றிடுவோம்
ஊழலற்ற நல்லோரின் உளப்பூர்வ நேசத்துடன்
உன்னாட்சி சிறந்திருந்த பொன்னான பாரதத்தில்
உன்னருளால் நல்லாட்சி மலர்ந்திடவே உழைத்திடுவோம்.
-பார்வதேயன்.
No comments:
Post a Comment