எச்சரிக்கை

எச்சரிக்கை

Thursday, 24 October 2013

தேச குருவுக்கு வணக்கம்!

விவேகனந்தம்150 தளத்தில் வெளிவந்த என் கவிதை.

நல்லதோர் குருவாகி மனதிலே உயர்ந்தோங்கி
நல்லோரை வாழ்விக்கும் நற்பண்பு போதிக்கும்
நேர்வழியாய் சநாதனத்தை உலகுக்கு உணர்த்திட்ட
நேசமிகு ஆசானே துறவியரில் தூயோனே


மறுமையது மட்டுமின்றி இம்மையும் சிறப்பாக
தேசத்தின் வளமைகள் மாந்தர்க்குப் பயனாக
மாநிலத்தில் தொழிலோங்க வழிசொன்ன பெம்மானே
தெள்ளிய சிந்தையதைப் போற்றிப் பணிகின்றோம்.


 தடையாகும் வினையறுக்க துணிவினைப் போதித்து
சிக்கல்கள் சீராக்க விவேகத்தை அறிவுறுத்தி
தரணியில் வாழ்வுய்ய நல்லவழி காட்டினீரே
சீர்மிக்க பொரியோய் நும்தாள் வணங்குகின்றோம்.
ஆயிரம் சாதிகள் ஆக்கிரமித்த போதுமிங்கு
அன்னியர் கேலிக்கு அஞ்சாது நேர்நின்று
ஆருயிர் சநாதனம் தழைத்தோங்க வழிகாட்டி
அரும்பாடு பட்டநும் பாதவழி தொடர்வோமே.
உலகத்தை வலம்வந்து உன்னதங்கள் உளங்கொண்டு
தொன்மதத்தின் பெருமைதனை மாந்தர்க்கு உணர்த்திடவே
உன்னதமாம் வேதங்கள் எளியோர்க்கும் புரிபடவே
தொண்டாற்றி மனச்செம்மை செழிக்கவழி செய்தோனே.
துன்பம் பொறுப்பதுவே வாழ்வின் நோக்கமென்ற
சநாதனம் காணாத சிறுமையின் சிகரத்தை
துணிவை அறிவுறுத்தித் தூர விலக்கிவைத்து
சங்கநாதம் முழங்கிட்ட குருவே வணங்குகின்றோம்.
தேசப் பணியாற்ற இளைஞர் பதின்மரென்ற
அழைப்பை ஏற்றிங்கே பலரும் இருக்கின்றோம்
தேசம் உய்விக்க நரேந்திரர் அடியொற்றி
அன்பாலே இணைந்திங்கே தாய்நாடு போற்றுகிறோம்.

- பார்வதேயன்.

No comments:

Post a Comment