ஈழத்துச் சாவுகுறித்து ஈரமிக்க கண்களுடன்
இங்கத்திய கவிவாலி கவிதை புனைந்துள்ளார்
எண்ணாறு மாதங்கள் காத்திருந்து கவிபுனைய
என்னதான் காரணம் என்றேயவர் சொல்லவில்லை
காலை உணவுக்கும் மதியம் உண்பதற்கும்
இடைப்பட்ட காலத்தில் பொதுப்பட்ட ஓரிடத்தில்
காலருகே துணைவியும் தலைமாட்டில் மனைவியும்
இணையாய் அமர்ந்திருக்க கலைஞர் நோன்பிருந்தார்
மூன்று மணிநேரம் ஓய்வெடுத்த தலைவரவர்
முகர்ஜி சொல்லிவிட்டார் போரோ நின்றதென்றார்
மூதிரித்த கூற்றுதனை நம்பிவந்த மாந்தரோ
முகம்மலர வெளிவந்து கூற்றுக்கிரை ஆகினரே
அப்போதும் அறச்சீற்றம் அற்றேதான் போனதுவோ
புரவலனை எதிர்த்தியம்பப் புலவனுக்கு நாவிலையோ
அதன்பின்னும் அகம்மலர அறிவாலயம் தொழுதீரே
புண்ணான ஈழத்தின் இதயங்களை மறந்தீரே
அதிகாரம் இழந்தபின்னே தில்லியிலும் தீர்ந்தபின்னே
நாடகம் நடத்தினாரே டெசோவெனும் தலைப்பினிலே
அதுவும்தான் ஓடவில்லை மக்களோ மயங்கவில்லை
நாடகத்தின் அங்கம்தானோ உமதிந்த இரங்கற்பா?
கோபாலபுரம் கொடுத்துவந்த கொடையதை விட்டதோ?
கொடாநாடெனக் கேலிசெய்த கொடநாடு கொடுத்ததோ?
திரைத்துறையில் ஈழத்துப் பாசம் மிகுவதனால்
வாய்ப்புக்கு வழிவேண்டி இறங்கற்பா புனைந்தீரோ?
ஈழத்தின் மீதுமக்கு திடீர்ப்பாசம் ஏனென்று
கருதுங்கால் கிட்டும் காரணமோ நீதியில்லை
ஈங்கமர்ந்து குமுதத்தில் கவிபாடி வருந்தினாலும்
காலனுக்குப் படையலிட்ட உயிர்கள்தாம் மீளுமோ?
- பார்வதேயன்.
பின்னிட்டிங்க
ReplyDeleteபின்னிட்டிங்க.அந்த காலத்தில் இருந்து நிகழ் காலம் வரை கவிகள் இப்படித்தான் வாலியை போல பிலாக்கணம் பாடியிருப்பார்கள் போல.
ReplyDelete